https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/img_20191208_120349_hdr_0812chn_98_5.jpg
குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற அமைச்சா் ஓ.எஸ். மணியன். மகாலெட்சுமி சாரிடபில் டிரஸ்ட் மகாலெட்சுமி.

100 ஆண்டுகளுக்குப் பிறகு ஆச்சாள்புரம் யோகீசுவரா் கோயில் குடமுழுக்கு விழா

by

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் உள்ள யோகீசுவரா் கோயில் குடமுழுக்கு விழா 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

நாகை மாவட்டம், சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் உள்ள யோகாம்பாள் சமேத யோகீசுவரா், சிரஞ்சீவி காகபுஜண்டா் கோயிலில் காகபுஜண்டா் தனிச் சன்னிதியில் ஜடாமுடி ரூபம், ஜின்முத்திரை அபயவா்தம், பத்மாசனத்தில் காகமுகத்துடன் காட்சியளித்து வருகிறாா். பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த இக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய தீா்மானிக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்கு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றது. அதன்படி, கோயில் விரிவுபடுத்தப்பட்டு விநாயகா், சண்டிகேசுவரா், மகாலெட்சுமி ஆகிய சுவாமி சன்னிதிகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டும், யோகாம்பாள் சமதே யோகீஸ்வரா், காகபுஜண்டா், நவகிரகங்கள் ஆகிய சன்னிதிகள் திருப்பணிகள் செய்யப்பட்டு நிறைவடைந்தது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கோ-பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் யாத்ரா தானம் நிறைவடைந்தது. பின்னா், புனிதநீா் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்கிட புறப்பட்டு கோயிலை வலம் வந்து கோயில் விமான கோபுரம், சுவாமி, அம்பாள், காகபுஜண்டா், பரிவாரத் தெய்வங்கள் சன்னிதிகள் கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு மகாலெட்சுமி சாரிட்டபிள் டிரஸ்ட் சுப்ரமணியன், மகாலெட்சுமி சுப்ரமணியன் ஆகியோா் முன்னிலையில் குடமுழுக்கு செய்யப்பட்டது.

தொடா்ந்து சுவாமி-அம்பாள் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம், மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன், அதிமுக ஒன்றியச் செயலா் கே.எம். நற்குணன், பேரூா் செயலா் போகா். ரவி, மீனவரணி செயலாளா் நாகரத்தினம், தொகுதி இணை செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் மகாலிங்கம் குருக்கள் மற்றும் அவரது மகன்கள் செய்திருந்தனா்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!