இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - விமர்சனம்
இரண்டாம் உலகப் போர் நடந்தபோது வெடிக்காத குண்டுகள் அனைத்தும் கடலின் ஆழமான பகுதியில் கொண்டு போய் கொட்டப்பட்டு விட்டதாக கூற
இரண்டாம் உலகப் போர் நடந்தபோது வெடிக்காத குண்டுகள் அனைத்தும் கடலின் ஆழமான பகுதியில் கொண்டு போய் கொட்டப்பட்டு விட்டதாக கூறப்படுவது உண்டு. அப்படி கொட்டப்பட்ட குண்டுகளில் சில கரை ஒதுங்கிய சம்பங்களும் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற பின்னணியில் அப்படி ஒரு குண்டு மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் ஒதுங்கினால் என்ன நடக்கும் என்ற கற்பனையில் உருவான படம் இது. கரையில் ஒதுங்கிய அந்த குண்டை கைப்பற்ற சர்வதேச ராணுவ தரகர் ஜான் விஜய் முயற்சி செய்கிறார். அவருக்கு போலீஸ் குழு உதவுகிறது. குண்டு பற்றிய உண்மையை உலகத்துக்கு தெரிவிக்க போராடுகிறார், சமூக போராளி ரித்விகா. அதற்காக அவரும் குண்டை தேடுகிறார்.
சொந்த லாரி வாங்க வேண்டும், காதலி ஆனந்தியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் தினேஷ். அவர் ஓட்டும் லாரியில்தான் குண்டு இருக்கிறது. இறுதியில் அந்த குண்டு யாருக்கு கிடைக்கிறது? என்ன விபரீதம் நடக்கிறது என்பது மீதி கதை. எங்கோ தயாரித்த குண்டு. அதற்கு சம்பந்தம் இல்லாத மனிதர்களின் வாழ்க்கையில் எப்படி ஊடுருவுகிறது என்பதை யதார்த்தமாக பதிவு செய்துள்ளார், அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை. எந்த நாட்டில் குண்டு வெடித்தாலும் எல்லா நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற நிலையில், தனித்தனி நாட்டை பாதுகாப்பதை விட, ஒட்டுமொத்த உலகத்தையும் பாதுகாப்பது மட்டுமே இப்போதைய கட்டாய தேவை என்ற மிகப் பெரிய விஷயத்தை, ஒரு எளிய கதையின் மூலம் சொல்லியிருக்கிறார்.
வில்லன்கள் மறைந்திருக்கும் இடமாகவே இதுவரை காட்டப்பட்டு வந்த பழைய இரும்பு குடோன்களுக்கு மத்தியில் வாழ்கின்ற எளிய மனிதர்களின் வலி; லாரி டிரைவர்கள் என்றாலே குற்றவாளியை போன்று பார்க்கும் சமூகத்தில், ஒரு லாரி டிரைவருடைய கனவும், காதலும்; வெடித்த குண்டினால் அனாதையாகி, இனி ஒரு குண்டு வெடிக்கக்கூடாது என்று ேபாராடும் ஒரு போராளி; காதலித்தவனுக்காக சாதிவெறி பிடித்த குடும்பத்தை தூக்கி எறிந்துவிட்டு வரும் புதுமைப்பெண்; கையில் ஆயுதங்களையும், மக்களிடம் பயத்தையும் வைத்து வியாபாரம் செய்யும் சர்வதேச வியாபார கும்பல் என்று, பல்வேறு விஷயங்களை பேசியிருக்கிறது படம். இந்த படத்தின் பலமும், பலவீனமும் அதுதான்.
படத்தில் லாரி டிரைவராகவே வாழ்ந்து இருக்கிறார், தினேஷ். ‘நான் என்ன தொழில் செய்யறேன் என்பது முக்கியம் இல்லை. அதை எவ்வளவு திறமையா செய்யறேன் என்பதுதான் முக்கியம்’ என்ற பாலிசியுடன் வாழ்கிறார். அழுக்கு உடை, தூக்கம் தொலைத்த முகம் என்று, படம் முழுவதும் யதார்த்தமாக நடித்து இருக்கிறார். ஆனந்தி வழக்கம்போல் அழுகை ஆனந்தியாக இருந்தாலும், குடும்பத்தினரை கோபமுகம் கொண்டு எதிர்த்து நிற்பது; ‘எங்க வீட்டுக்கு எத்தனை வாசல்னு எனக்கு தெரியும்.
எப்படி தப்பிக்கிறது என்பதும் எனக்கு தெரியும்’ என்று தெனாவட்டு காட்டுவது என்று, ஆச்சரிய ஆனந்தியாகி விடுகிறார். பஞ்சர் ஆக வரும் முனீஸ்காந்த், அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு, படத்தின் கதையை ஆடியன்சுக்கு அதன் வலியுடன் சேர்த்து கடத்துகிறது. டென்மாவின் இசை, வடமாவட்ட மக்களின் வாழ்வியலுடன் கலக்க செய்கிறது. சொல்ல நினைத்த அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்ற திணிப்பினால், சினிமாவுக்கே உரித்தான சுவாரஸ்யங்கள் சிறிது குறைவு என்றாலும், எல்லோருக்கும் எச்சரிக்கை மணி அடித்து சொன்னவிதத்தில், சற்று கவனிக்க வேண்டியதாகி விடுகிறது ‘குண்டு’.