http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__41134059429169.jpg

புதுச்சேரியில் முதன் முறையாக பெண்கள் மட்டுமே பணியாற்றும் பிரத்யேக தபால் நிலையம் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்முறையாக அனைத்து மகளிர் தபால் நிலையம் உதயமாகியுள்ளது. பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் சூழலில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் அஞ்சலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது தனி கவனத்தை ஈர்த்துள்ளது. அஞ்சல் துறையில் முழுக்க முழுக்க பெண் பணியாளர்களை கொண்டு தபால் நிலையங்களை ஏற்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டது. இதன் பலனாக கடந்த 2013ம் ஆண்டு டெல்லியில் முதன்முறையாக பெண்கள் தபால் நிலையம் தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் அஞ்சல் அலுவலகம் அனைத்து மகளிர் தபால் நிலையமாக உதயமாகியுள்ளது. இந்த அஞ்சலகத்தில் நிலை அதிகாரி, உதவியாளர், உரைகளில் முத்திரை இடுவோர், தபால்க்காரர் என அனைத்து பிரிவுகளிலும் பெண்களே பணியாற்றுகின்றனர்.

அனைத்து துறைகளிலும் 33 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு பெண்கள் போராடி கொண்டிருக்கும் சூழலில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் அஞ்சலகம் திறந்து இருப்பது தங்களுக்கு பெருமையாக உள்ளதாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்து பொறுப்புகளிலும் பெண்கள் இருப்பது தங்களுக்கு மிகவும் கௌரவமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆதலால் பெண் வாடிக்கையாளர்கள் வரும் போது எந்தவித தயக்கமோ, அச்சமோ இன்றி மகிழ்வுடன் தங்களை அணுக, அவர்களுக்கு ஏதுவான சூழல் இந்த அஞ்சலகத்தில் உள்ளதாக கூறுகின்றனர். இந்த அஞ்சலகத்தில் பணியாற்றும் பெண்கள், பெண்களின் வளர்ச்சியை பற்றி பேச்சில் மட்டும் இல்லாமல் அதனை செயல்படுத்தி இருப்பது மக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.