ஜடா - விமர்சனம் - விமர்சனம்
எல்லா விளையாட்டுக்குமே சூதாட்ட விளையாட்டு என்ற இன்னொரு முகம் உண்டு. விதிமுறைகளுடன் விளையாடும் கால்பந்து போட்டிக்கு ‘லெவன
எல்லா விளையாட்டுக்குமே சூதாட்ட விளையாட்டு என்ற இன்னொரு முகம் உண்டு. விதிமுறைகளுடன் விளையாடும் கால்பந்து போட்டிக்கு ‘லெவன்த் விளையாட்டு’ என்று பெயர். இதன் சூதாட்ட விளையாட்டுக்கு ‘செவன்த் விளையாட்டு’ என்று பெயர். வடசென்னை பகுதியில் இப்போதும் நடந்து வரும் இந்த விளையாட்டுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. ஆயுதங்களை பயன்படுத்தாமல் கோல் போட, என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற ஒரே ஒரு விதிதான் உண்டு. கால்பந்து போட்டியை உயிராக மதிக்கின்ற சில வீரர்கள், அதிக பணத்துக்காக இந்த விளையாட்டு வலைக்குள் விழுந்து உயிரிழப்பார்கள். அப்படி உயிரிழந்த ஒரு கால்பந்து கோச், கிஷோர்.
அதற்கு பழிவாங்க, அதே விளையாட்டை பயன்படுத்துகிறார் அவரது மாணவர் கதிர். இவ்விரு வீரர்களை பற்றிய கதை இது. கால்பந்து விளையாட்டு வீரர் வேடத்தில், அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் கதிர். காதலியாக வரும் ரோஷிணி பிரகாஷ், விரல் விட்டு எண்ணக்கூடிய காட்சிகளில் மட்டுமே வருகிறார். நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இல்லை. வாய் பேச முடியாத, காது கேளாத இளைஞன் கவுதம் செல்வராஜின் கால்பந்து கனவும், காதலி ஸ்வாதிஷ்டாவின் கண்ணீரும் கவிதை போலிருக்கிறது.
யோகி பாபு கால்பந்து வீரராக வருவதுடன், அவ்வப்போது காமெடியும் செய்து இருக்கிறார். காமெடியை விட, அவரது கால்பந்து விளையாட்டு கவனிக்க வைக்கிறது. படம் முழுக்க அமைதியாக இருந்துவிட்டு, கடைசி 15 நிமிடங்கள் டெரர் வில்லத்தனம் காட்டியிருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். இன்னொரு வில்லனாக வருகிறார், சண்முகம் முத்துசாமி. படத்தில் பெரும்பாலும் கால்பந்து போட்டிகள்தான். அவற்றை விறுவிறுப்பாக்க உதவியிருக்கிறது, சாம் சி.எஸ்சின் பின்னணி இசை. ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.சூரியனின் கேமரா, கால்பந்து போட்டி மற்றும் பேய் துரத்தல் காட்சிகளில் தனித்தனி வண்ணம் காட்டியிருக்கிறது.
வித்தியாசமாக சொல்லப்பட்டு வந்த ஒரு கதைக்குள் திடீரென்று பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளை திணித்து, படத்தின் ஒட்டுமொத்த தன்மையையே மாற்றிவிடுவது மெகா சைஸ் மிஸ்டேக். இதனால் முழுமையான ஸ்போர்ட்ஸ் படம் போலவும் இல்லாமல், பேய் படம் போலவும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது படம். நாளை இறுதிபோட்டியை வைத்துக்கொண்டு, எந்த வீரனாவது நள்ளிரவு சினிமா காட்சிக்கு செல்வானா?
செவன்த் கால்பந்து போட்டிக்கு எதிராக இருக்கும் கிஷோர், பிறகு எதற்காக மறுபடியும் அந்த விளையாட்டுக்கு செல்கிறார் என்பதில் தெளிவு இல்லை. கிஷோர், கதிர் பாசத்திலும் அழுத்தம் இல்லை. வித்தியாசமாக ஆரம்பித்து, பிறகு வழக்கம் போல் முடிந்துவிடுகிறது ஜடாவின் விளையாட்டு.