இணைந்த நேர அட்டவணையில் பயணத்தை தொடர இணக்கப்பாடு! அமைச்சர் டக்ளஸ்
by Thileepan, Rebeccaவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இ.போ.ச பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணத்தை தொடர்வதில் காணப்பட்டு வந்த இழுபறி நிலை இன்று இடம்பெற்ற இரு தரப்பு சந்திப்பின் மூலம் வெற்றியடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செலயகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொது இணக்கப்பாட்டில், கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட இணைந்த நேர அட்டவணையினை நடைமுறைப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒரு ஒழுங்கில் நடைமுறைப்படுத்த அவர்கள் இணங்கியுள்ளனர். ஆகவே, இரண்டு வாரத்திற்கு இதனைபார்த்து பின்னர் இதில் குறைபாடுகள் காணப்படுமாயின் அவற்றை திருத்தம் செய்ய தயாராக இருக்கின்றோம்.
ஆகவே இன்று எடுக்கப்பட்ட முடிவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இ.போ.சயினர் தமது தரப்பில் முடிவுகளை எடுக்க முடியாது எனவும் தமது தலைமைப்பீடமே முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இ.போ.ச தலைமையதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட போது, இணைந்த நேர அட்டவணைக்கு இணங்கியிருந்தார்.
இந் நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் இ.போ.சபையின் உடன்பாட்டுடன் முன்பு நடைமுறையில் இருந்த நேர அட்டவணையின் பிரகாரம் நாளை செவ்வாய்க்கிழமையில் இருந்து சேவையில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்ட முடிவின் பின்னர் புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் ஆகியோர் பேருந்து நிலையத்தினை பார்வையிட்டதுடன் இரு தரப்புஉத்தியோத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு சேவையினை ஒரு சில வாரத்திற்கு பரீட்சாத்தமாக செயற்படுத்தவும் இதன்போது ஏற்படும் பிரச்சினைகளை சீர்செய்வதாகவும் உறுதியளித்திருந்தனர்.
வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தினால் தொடர்ந்தும் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்து பணியாளர்களுக்கிடையில், பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவது மற்றும் பயணிகளை ஏற்றுவதில் காணப்பட்ட போட்டித்தன்மை முரண்பாடாக இருந்து வந்தது.
இம்முரண்பாடு நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டிருந்ததுடன், வட மாகாண போக்குவரத்து அமைச்சு சில ஆண்டுகளுக்கு முன்னர் இரு தரப்பினருடன் உரையாடி இணைந்த நேர அட்டவணையினை நடைமுறைப்படுத்தியிருந்தது.
எனினும், அதிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் முரண்பாடான நிலை காணப்பட்டு வந்ததுடன், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இம் முரண்பாடுகள் நிறுத்தப்பட்டு முரண்படுவோருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இணைந்த நேர அட்டவணையினை மீள் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் பயணிகளின் போக்குவரத்து மற்றும் வீதியில் பேருந்துகளுக்கிடையிலான வேகத்தினை கட்டுப்படுத்தும் சாத்தியவளம் உள்ளதை உணர்ந்து கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன்பிரகாரம், கடந்த வாரம் பேருந்து நிலையத்தினை பார்வையிட்ட அமைச்சர் இரு தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.