https://s3.amazonaws.com/adaderanatamil/1575865191-sir-padaya-2.jpg

சிவனொளிபாத மலை யாத்திரிக்காலம் நாளை ஆரம்பம்

சிவனொளிபாத மலை யாத்திரிக்காலம் நாளை (10) ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு புனித பொருட்கள் நாளை மலையின் உச்சியில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

இந்த வகையில் இன்று (09) மாலை பெல்மடுல்ல, கல்பொத்தாவல ரஜமகா விஹாரையில் வைக்கப்பட்டுள்ள சமன் தெய்வத்தின் உருவச்சிலை மற்றும் ஏனைய புனித சின்னங்களுக்கான விடே பூஜைகள் இடம்பெறவுள்ளன.

அதற்கமைய நாளை அதிகாலை புனித சின்னங்களை சிவனொளிபாத மலைக்கு எடுத்துச்செல்லும் ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

இந்த ஊர்வலம் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிட்ட, எஹெலியகொட, அவிஸ்ஸவெல்ல, தெஹியோவிட்ட, கரவனெல்ல, ஹட்டன், மஸ்கெலியா ஊடாக நல்லத்தண்ணி வரை பயணிக்கவுள்ளது.

அதேபோல் சமன் தெய்வத்தின் புனித சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் நாளை இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம் அமையும் பௌர்ணமி தினத்துடன் ஆரம்பமாகும் சிவனொளிபாத மலை யாத்திரிக்காலம் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரவுள்ளது.

அதன்படி சிவனொளிபாத மலை யாத்திரிக்காலம் எதிர்வரும் வெசக் பௌர்ணமி தினத்துடன் நிறைவுபெறவுள்ளது.

சிவனொளிபாத மலை யாத்திரிக்காலம் தொடர்பில் பெல்மடுல்ல பிரதேச செயலாளர் விசேட வர்தமானி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் 8 பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெல்மடுல்ல நகரில் இருந்து சிவனொளிபாத மலை வரையான புனித பூமியில் நன்கொடை சேகரிப்பது தடை செய்யப்பட்டுள்ளமை அதில் முக்கியமானதாகும்.