https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/15/original/180320-workplace-stress-al-1233_4044ea14f8d750a8c1d4a1563fd1fdc6.jpg

மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டுமா?

by

ஆரோக்கியமான பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க மூளைக்கு பயிற்சி அளிக்க முடியும் என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் செலினா பார்ட்லெட்.

ஒரு ஆராய்ச்சியாளராக கடந்த 25 ஆண்டுகளாக மனித மூளை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விதத்தை கணித்து வரும் பார்ட்லெட்டின் கூற்றுப்படி, சர்க்கரை மற்றும் ஆல்கஹால் நுகர்வு, போதை உள்ளிட்ட பழக்க வழக்கங்கள் மூலம் மூளை பெரும்பாலும் மன அழுத்தத்தையும் அதிர்ச்சியையும் சமாளிக்க முயல்கிறது என்று Stuff.co.nz என்ற இணையதளத்தில் தன் ஆராய்ச்சியைப் பற்றி கூறியிருக்கிறார்.

https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/3/original/coffee-woman-stress-pixabay-1266295_1920aa-770x470.jpg

அமைதியான மனதை அடைவதற்கான முதல் படியாக மன அழுத்தத்தை திறம்பட கையாள 'உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்க முடியும்' என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார் இந்த குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்.

"மக்கள் ஆல்கஹால் மற்றும் சர்க்கரையை மருந்துகளாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள், இத்தகைய மருந்துக்கான மருந்தை என்னால் தொடர்ந்து வடிவமைக்க முடியாது. என் ஆய்வகம் நியூரோபிளாஸ்டிக் தன்மையைப் பயன்படுத்துவதற்கான திறனைத்தான் ஆராய்கிறது. இது மூளைத் தன் திறனை தானே மாற்றிக் கொள்ளும் வகையை ஆராய்கிறது. அதாவது, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம், மூளையின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த முடியும்,  மன அழுத்தம் மற்றும் அதிர்ச்சிகளை இவ்வகையில் குறைக்க முடியும்" என்று போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளை உருவாக்கும் பார்ட்லெட் கூறினார்.

https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/14/original/stress-good.jpg

மிக அடிப்படையான ஆரோக்கியமான மாற்றத்தை உருவாக்குவதற்கு நிறைய நேரம் எடுக்கும் என்று அவர் கூறினார்: "எப்போது நாம் இயல்பாகவே மன அழுத்தத்துக்கு உட்படுவதை தவிர்க்கிறோமோ அப்போதுதான் அதற்கான மாற்றை உருவாக்கலாம். இருப்பினும், நீங்கள் தினமும் காலையில் எப்படி எழுகிறீர்கள்,  என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்விதமான உடற்பயிற்சி செய்கிறீர்கள், எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் மற்றும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீக்ரள் போன்ற சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் உண்மையில் உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்க முடியும்" என்றார் பார்ட்லெட்.  மேலும் அவர் கூறுகையில், சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது மூளையின் உணர்ச்சிபூர்வமான பகுதியான அமிக்டாலாவில் (amygdala) செயல்படுகிறது, இதனால் மன அழுத்தத்துக்கு மூளை எதிர்வினையாற்றுகிறது.

நேர்மறையை விட நம் மூளை எதிர்மறைக்குத்தான் அதிகம் செயல்படுகிறது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்திய ஆராய்ச்சியாளர் கூறுவது: "நன்றியுணர்வு மிகவும் நேர்மறையாக செயல்படுகிறது. நீங்கள் காலையில் எழுந்ததும், உங்கள் மூளையை நேர்மறையான சிந்தனையில் அமைத்துவிட்டால்,  நாள் முழுவதும் அந்த எண்ண அலைகள் எதிர்மறையான விஷயங்களைத் தடுக்கத் தொடங்கும்’

https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/12/original/stress_problems.jpg

"நியூரோபிளாஸ்டிக் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மூளைச் செயல்பாட்டை மேலும் நேர்த்தியடைய வைக்க எங்களால் பயிற்சியளிக்க முடியும். மருந்துப் பொருட்களை நம்புவதை விட மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான ஆரோக்கியமான பாதையை தேர்ந்தெடுத்துச் செல்லவும் கற்றுக் கொள்ளலாம்," என்று Stuff.co.nz எனும் இணையதளத்தில் கூறியுள்ளார்.

எளிமையான மாற்றங்களால் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை தான் கண்டு அடைந்ததாகக் கூறும் பார்ட்லெட்:  "நான் முன்பு எப்போதையும் விட மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் ஏதாவது பிரச்னையோ, சூழலோ எதிராக இருந்தால், வேறு வழியில்லை நாம் உணர்ச்சிவசப்பட்டுதான் ஆக வேண்டும், அது நிச்சயம் நம்மை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும். எல்லோருமே அப்படித்தான், காரணம் அதுதான் வாழ்க்கை.  இருப்பினும், இப்போது எனக்கு மன அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்துவிட்டதால் அதை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது’என்றார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!