http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__482464015483857.jpg

அருப்புக்கோட்டை நகரில் விபத்து ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள்

*வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகரில் உள்ள ரோடுகள் குறுகலானவை. மேலும் ரோடுகள் பெரும்பாலும் குண்டும், குழியுமாக உள்ளது. இவற்றில் வாகனங்கள் இயக்குவதே பெரிய விஷயம். இந்த ரோடுகளில் வாகனங்களை அதிவேகத்தில் எப்படி இயக்கி செல்லமுடியும்.  எப்போதும் ரோடு பரபரப்பாக இருப்பதால் நகருக்குள் வாகனங்களும் வேகமாக செல்வதில்லை. இருப்பினும் மதுரை ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் திருச்சுழி ரோட்டிலும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

கனரக வாகனங்கள் வளைந்து, வளைந்து செல்ல வேண்டியுள்ளது.  இந்த நேரங்களில் பேரிகார்டுகளை இடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட முத்துராமலிங்கபுரத்தில் பேரிகார்டில் மோதி ஒரு போலீஸ்காரர் உயிரடிழந்தார். மதுரை ரோடு, திருச்சுழி ரோடு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டு பகுதிகளில் இருள் மூழ்கி உள்ளது. இருளில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளால் விபத்து ஏற்படுகிறது. ரிப்ளக்டர் ஸ்டிக்கர் இல்லாமல் உள்ளது. இதேபோல் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு முக்கிய ரோடுகளிலும் போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகளை வைத்துள்ளனர். யார் நினைத்தாலும் அருப்புக்கோட்டை ரோட்டில் வேகமாக போக முடியாது. போக்குவரத்தை தடை செய்யும் வகையில் உள்ள பேரிகார்டுகளை அகற்ற மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உத்தரவிட வேண்டும்.

தேவைப்பட்டால் வேகத்தடை அமைக்கப்பட வேண்டும். இந்த பேரிகார்டுகளால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த இடங்களில் போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை கட்டுப்படுத்தலாம். ஆனால் அவர்கள் அந்த பணியை விட்டுவிட்டு ஹெல்மெட் அபராதம் வசூல் செய்வதிலேயே அக்கறை காட்டுகின்றனர்.  விபத்து அபாயம் நீங்க பேரிகார்டுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.