http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__4024684429169.jpg

அறந்தாங்கி அருகே மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட கஜா நிவாரண அரிசி மூட்டைகள்

*நடவடிக்கை எடுக்ககோரி சாலைமறியலால் பரபரப்பு

அறந்தாங்கி : அறந்தாங்கி அருகே கஜா புயல் நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி மூட்டைகளை சிலர் மண்ணில் புதைத்து பதுக்கி உள்ளனர். பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. புயலின் கோரத் தாண்டவத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த வீடுகள், தென்னந்தோப்புகள், மரங்கள் சாய்ந்தன. புயல் தாக்கிய பகுதிகளை சேர்ந்த மக்கள் தாகத்தை தீர்க்க தண்ணீர் கூட கிடைக்காமல் நிலை குலைந்தனர்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்பினரும் குடிநீர், அரிசி, உடைகள் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கினர். ஒரு சில நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசின் சார்பில் 10 கிலோ எடை கொண்ட அரிசி மூடைகளும் மக்களுக்கு நிவாரண உதவியாக வழங்கப்பட்டன. ஒரு சில பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் வழங்கிய அரிசி மூடைகளில் அதிமுக ஸ்டிக்கர் ஒட்டி வழங்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்தன.இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அரசர்குளம் கீழ்பாதி கிராம சேவை மையத்தின் பின்புறத்தில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. உடனே பொதுமக்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, அங்கு கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட 10 கிலோ எடையுள்ள சுமார் 50 மூட்டைகள் புதைக்கப்பட்டிருந்தன.

புதைக்கப்பட்டிருந்த மூடைகளில் இருந்த அரிசி கெட்டு போய் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறியது: கஜாபுயலின்போது பல்வேறு நிறுவனங்கள் கொடுத்த அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை சிலர் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்காமல் உள்ளாட்சி தேர்தலுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைத்திருந்தனர்.

அரிசி கெட்டுப்போய் துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் மற்ற பொருள்களை அப்புறப்படுத்தி விட்டனர். இதுபோல் மனிதாபிமானம் இல்லாமல் கஜா நிவாரணப் பொருட்களை பதிக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.