http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__397625148296357.jpg

சொக்கிகுளம்-ஊமச்சிகுளம் இடையே 7 கி.மீ. பறக்கும் பாலப்பணி இழுத்தடிப்பு

* 220 தூண்களில் 25 மட்டுமே இணைப்பு
* திட்டமிட்டபடி முடிப்பதில் சிக்கல்
*  போக்குவரத்து நெருக்கடி, புழுதி,சகதியால் மக்கள் அவதி

மதுரை :  மதுரை சொக்கிகுளம்- ஊமச்சிகுளம் இடையே 7 கி.மீ. நீள பறக்கும் பாலம் கட்டும் பணி ஓராண்டாக காட்டிய வேகம் மெல்ல குறைகிறது. தூண்களும் முழுமையாக அமைத்து முடிக்கப்பட வில்லை. இதனால் திட்டமிட்டபடி பாலம் கட்டி முடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. சாலைகள் பாழ்பட்டு போக்குவரத்து நெருக்கடி, புழுதி, சகதியில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். மதுரை- நத்தம் சாலை ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் தேசிய நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதில் சொக்கிகுளம் பி.டி.ஆர். சிலையில் இருந்து ஊமச்சிகுளம் வரை 7 கி.மீ. நீளம்  கட்டும் பறக்கும் பாலத்தின் மதிப்பீடு ரூ.626 கோடியாகும். இந்த பாலம் கட்டும் பணி 2018 ஜூலையில் துவங்கியது. 7 கி.மீ. தூரமும் 220 தூண்கள் அமைக்கப்படுகின்றன. 2 ஆண்டில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. நவீன தொழில் நுட்பத்தில் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றதால் திட்டமிட்டபடி பாலம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஓராண்டாக நீடித்த வேகம் மெல்ல குறைவதாக புகார் எழுந்துள்ளது. முயல் வேகம் ஆமையாகிறது என்று பலரும் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

ஏனென்றால் பணிகள் தொடங்கி 16 மாதங்கள் கடந்துள்ள நிலையில் திட்டமிட்டபடி பணி குறிப்பிட்ட சதவீதம் முடிய வில்லை. மொத்தம் 220 தூண்கள் பூமியை தோண்டி அமைக்க வேண்டும். இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அய்யர்பங்களா முதல் திருப்பாலை வரை இன்னும் தோண்டும் பணியே ஆரம்பமாகவில்லை. சொக்கிகுளம் சந்திப்பில் இருந்து ரேஸ்கோர்ஸ் காலனி சந்திப்பு வரை 16 தூண்களில் மேல்தளம் இணைக்கும் பணி சூப்பராக முடிந்துள்ளது. அங்கிருந்து 17வது தூண் இணைப்பு பணி ஆரம்பமாகி உள்ளது. இதுதவிர நாராயணபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் 9 தூண்கள் என மொத்தம் இதுவரை 25 தூண்கள் மட்டுமே இணைந்துள்ளன. ரெடுமேடு காங்கிரீட் தளம் வேறு இடத்தில் தயாரித்து கிரேன் மூலம் தூக்கி வந்து தூண்களுக்கு இடையே பொருத்தப்படுகிறது. பெரும்பாலான தூண்களில் சிறகு பகுதிகள் இனிமேல் தான் அமைக்க வேண்டும்.

சொக்கிகுளத்தில் பாலத்தின் மேல் ஏறி, இறங்குவதற்காக அழகர்கோவில் சாலை, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் செல்லும் மாவட்ட நீதிமன்றம் நோக்கிய சாலை, கோகலே சாலை ஆகிய 3 சாலைகளில் பாதைகள் அமைக்கின்றன. இதற்காக அந்த சாலைகளில் தூண்கள் எழுப்புவதற்காக தோண்டும் பணிகள் இப்போது தான் ஆரம்பமாகி உள்ளன. எனவே பாலம் திட்டமிட்ட கால அவகாசத்தில் கட்டி முடிப்பதில் சிக்கல் எழுந்து தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
பாலம் கட்டுவதற்காகவும், சாலை விரிவாக்கத்திற்காகவும் 7 கி.,மீ நீளம் தோண்டி பாழ்பட்டு கிடக்கிறது. “மழை பெய்தால் சகதி, வெயிலடித்தால் புழுதி, இதுதான் இந்த சாலையின் கதி” என்றாகி, மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

 மேடு பள்ளங்களில் சிக்கி டூவீலரில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகி, கை கால் எலும்பு முறிவு நித்தம் நித்தம் ஏற்படுகிறது. புழுதியால் சுவாச கோளாறுக்கு வழிவகுக்கிறது. டூவீலரில் செல்வோர் திருப்பாலை, அய்யர்பங்களா பகுதியில் இருந்து பிரிந்து தபால் தந்திநகர், பீபிகுளம் வழியாக சுற்றி செல்கிறார்கள். பஸ்கள் புதூர் வண்டிப்பாதை, டி.ஆர்.ஓ.. காலனி வழியாக சுற்றுகிறது. இதனால் அந்த குறுகிய சாலைகளில் நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த 7 கி.மீ. தூரமும், அதை தாண்டி சத்திரப்பட்டி அதன் இருபுறமும் குடியிருப்பு நிறைந்த பகுதியாகும்.

வழிகாட்டுதல் இல்லை

பாலம் கட்டும் பணி எப்போது முடிவடையும்? என்பதையே அதிகாரிகளால் கணிக்க முடியாத நிலையில், பாழ்பட்டுள்ள சாலையை தற்காலிகமாக பழுதுபார்க்க வழிகாணப்பட வில்லை. முக்கியமாக அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழி குறித்து காவல்துறையின் எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் உள்ளது என போக்குவரத்து ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.