புதிதாக உதயமான செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 மாதத்திற்குள் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் : முதல்வர் பழனிசாமி பேச்சு
செங்கல்பட்டு: தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது. புதிய செங்கல்பட்டு மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் என 3 வருவாய் கோட்டங்களும் இடம்பெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் ஆகிய தாலுகாக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெறுகின்றன. இதனிடையே காஞ்சிபுரத்தை பிரித்து உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக பணிகளையும் முதல்வர் பழனிசாமி நேரில் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, 'அதிமுக அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. 2வது உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 மாதத்திற்குள் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். இடைத் தேர்தலை போல அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்' என்றார்.
செங்கல்பட்டு மாவட்டம்
கோட்டங்கள்:
செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம்.
நகராட்சிகள்:
செங்கல்பட்டு, தாம்பரம், மறைமலைநகர், பம்மல், அனகாபுத்தூர்,பல்லாவரம், மதுராந்தகம், செம்பாக்கம்
பேரூராட்சிகள்:
திருக்கழுக்குன்றம், இடைக்கழிநாடு, கருங்குழி. கூடுவாஞ்சேரி, அச்சிறுப்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர், சிட்லபாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை.
ஒன்றியங்கள்:
புனித தாமஸ் மலை, காட்டாங்கொளத்தூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், லத்தூர், மதுராந்தகம்.செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 712 வருவாய் கிராமங்கள் உள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் இயங்கி வந்தது. இதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரம் உள்பட பல பகுதிகள் அடங்கிய பெரிய மாவட்டமாக இருந்தது. கடந்த 1997ம் ஆண்டு, நிர்வாக வசதிக்காக செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாக பிரித்து திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு நகரம் இணைந்தது.இதனால், பல்வேறு கோரிக்கைகள், நலத்திட்ட உதவிகளை பெற காஞ்சிபுரத்தில் இயங்கிய கலெக்டர் அலுவலகத்துக்கு கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வசிக்கும் மக்கள், சென்று வந்தனர்.
இதனால், அவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.இதையொட்டி சுமார் 100 கிமீ தூரம் வரை பொதுமக்கள், பயணம் செய்ய வேண்டியுள்ளது என விரக்தியுடன் கூறி வந்தனர். இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தை தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், கடந்த ஜூலை 18ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக இயங்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைதொடர்ந்து, 8 தாலுகாக்களை உள்ளடக்கிய செங்கல்பட்டு தனி மாவட்டம், இன்று (29ம் தேதி) உதயமானது.