https://s3.amazonaws.com/adaderanatamil/1575019296-gotabaya-rajapaksha-2.jpg

இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்களை கடன் உதவியாக வழங்க இந்தியா தீர்மானம்

2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமருக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது.

இரு தரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

இதன்போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்திய பிரதமருக்கு இலங்கை சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் உதவியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அதேபோல், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.