காந்தியை கொன்ற கோட்சேவை, ‘தேசபக்தர்’ என கூறியதற்கு மக்களவையில் மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங் தாக்கூர்
புதுடெல்லி: காந்தியை கொன்ற கோட்சேவை, ‘தேசபக்தர்’ என தெரிவித்த கருத்துக்கு பிரக்யா சிங் தாக்கூர் இன்று மக்களவையில் மன்னிப்பு கோரினார். முன்னதாக ‘தேசபக்தர்’ என தொடர்ந்து கூறும் எம்பி. பிரக்யா சிங் தாக்கூருக்கு, நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜ தடை விதித்தது. மேலும், பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
காந்தியை கொன்ற கோட்சேவை, ‘தேசபக்தர்’ என எம்பி. பிரக்யா சிங் பேச்சு
கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை ‘தேசபக்தர்’ என பா.ஜ எம்.பி பிரக்யா தாக்கூர் கூறினார். இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனம் எழுந்ததால், அவர் தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், மக்களவையில் நேற்று முன்தினம் சிறப்பு பாதுகாப்பு (எஸ்பிஜி) சட்ட திருத்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, காந்தியை கொன்றது ஏன்? என கோட்சே கூறியதை மேற்கோள் காட்டினார். அப்போது குறுக்கிட்ட பிரக்யா தாக்கூர், ‘தேசபக்தரை முன்னுதாரணமாக கூறக் கூடாது,’ என்றார். அவருடைய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், மக்களவை நேற்று கூடியதும், பிரக்யா தாக்கூர் கருத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பிரக்யா சிங் தாக்கூருக்கு, நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள தடை
இந்நிலையில், பிரக்யா மீது பாஜ ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இது குறித்து பாஜ செயற் தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், ‘‘பிரக்யா தெரிவித்த கருத்து கண்டத்துக்குரியது. இது போன்ற கருத்தை பாஜ ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அவர் இந்த கூட்டத் தொடர் முழுவதும், பாஜ நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.மேலும், பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
மன்னிப்பு கோரினார் பிரக்யா தாக்கூர்
இந்நிலையில், கோட்சே குறித்து தெரிவித்த கருத்துக்கு பிரக்யா சிங் தாக்கூர் இன்று மக்களவையில் மன்னிப்பு கோரினார். கோட்சேவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய அவர், ‘நான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்’ என்றார்.எனினும் பிரக்யா தாக்கூரின் மன்னிப்பை ஏற்க மறுத்து மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்..