http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__705486476421357.jpg

முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணையை கட்டாயம் வீடியோ-ஆடியோ பதிவு செய்ய வேண்டும்,..நீதிமன்றங்களுக்கு மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணையை கட்டாயம் வீடியோ-ஆடியோ பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றங்களுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 3 மாதத்திற்குள் செய்து தர வேண்டும் எனவும் உத்தரவு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 10 ஆண்டுகளுககு மேல் தண்டனை அளிக்க கூடிய முக்கிய வழக்கு விசாரணையை வீடியோ, ஆடியோ பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களில் கட்டாயம் வீடியோ, ஆடியோ பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகளிர் நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணையையும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு  உத்தரவிட்டுள்ளது.

வீடியோ, ஆடியோ பதிவுக்கான ஏற்பாடுகள் செய்தது பற்றி நிலை அறிக்கையை தமிழக அரசு ஏப்ரல் 1 ம் தேதி அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு தெரிவித்துள்ளது. குற்றவழக்குகளில் சாட்சியம் அளிப்போர் பிறழ்சாட்சிகளாகி விடுவதால் குற்றவாளிகளை தண்டிக்க  முடியாமல் போய்விடுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில்  சாட்சிகள் தரும் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்தால் பிறழ்சாட்சியாக மாற வாய்ப்பு குறையும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். குற்றவழக்குகளில் விசாரிக்கப்படும் சாட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைப்படி பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.