http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__699321925640107.jpg

'யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோர மாட்டார்களா' என அதிமுக எதிர்பார்க்கிறது: ஸ்டாலின் குற்றசாட்டு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிமுக ஆட்சிக்கு விருப்பமில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக திட்டம் போடுகிறது என்ற அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, ' உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடத்தாமல் எதாவது ஒரு காரணங்களை சொல்லி அதிமுக ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோர மாட்டார்களா' என அதிமுக எதிர்பார்க்கிறது என குற்றம் சாட்டினார். உள்ளாட்சி தேர்தலை முறைப்படி நடத்தினால் அதனை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது எனக் கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலை நிறுத்த சதி செய்யும் அதிமுக திட்டமிட்டு திமுக மீது பழி போடுகிறது என்று குற்றம் சாட்டினார். அதேபோல ஊடகத்துறையில் இருப்பவர்களும் தேர்தல் நடத்தாததற்கு ஆளும்கட்சிக்கு சம்பந்தம் இல்லாதது போலவும், திமுக தான் நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவை பெறுகிற முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்களை பரப்பி வருவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது என கூறினார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான உண்மை நிலையை கூறிய அவர்,

* உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுவரையறை அதிமுக அரசு இதுவரை செய்யவில்லை.

* புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை பணிகளை அதிமுக அரசு முடிக்கவில்லை என தெரிவித்தார்.

* அதேபோல உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பழங்குடி மற்றும் பட்டியலினத்தோருக்கு உரிய இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

* மாவட்ட பஞ்சாயத்துக்கு ஒதுக்கீடும் இதுவரை செய்யவில்லை.

* சற்று மாதங்களுக்கு முன்னாள் மேயர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவித்தனர். ஆனால் திடீரென அதனை மாற்றி மறைமுக தேர்தல் என்று மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டினார்.