http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__358242213726044.jpg

அரசு உயர் அதிகாரிகள் துணையுடன் கொள்ளிடம், வெண்ணாற்றில் சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகள்

*ஒரு நாளைக்கு ரூ.1 கோடி மணல் கொள்ளை
*கீழ்மட்ட அலுவலர்கள் புலம்பல்

தஞ்சை : தஞ்சை அருகே அரசு உயரதிகாரிகள் துணையுடன் கொள்ளிடம், வெண்ணாற்றில் சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் மூலம் தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.1 கோடிக்கு மேல் மணல் குவாரி உரிமையாளர்கள் கொள்ளையடிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.தஞ்சை அருகே பள்ளியக்ரகாரத்தில் இருந்து வெண்ணாற்றங்கரையில் பனவெளி செல்லும் வழியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஒருவருக்கு சொந்தமான படுகை உள்ளது. இதில் சவுடு மண் எடுக்கிறோம் என தஞ்சை ஆர்டிஓ மூலம் அனுமதி பெற்று தினமும் குறைந்தபட்சம் 200 லாரிகளில் விதிமுறைக்கு மாறாக மணல் அள்ளப்படுகிறது. இரவு நேரம் என்பதால் படுகையை தாண்டி வெண்ணாற்றில் பொக்லைன் மூலம் மணலை எடுத்து கரையில் கொட்டி அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

பள்ளியக்ரகாரம் சுற்றுச்சாலையில இருந்து பனவெளி செல்லும் சாலையில் இரவு நேரங்களில் மணல் ஏற்றுவதற்காக நூற்றுக்கணக்கான லாரிகள் செல்வதால் அச்சாலையில் கிராம மக்கள் செல்ல முடியவில்லை. வரிசை கட்டி மணல் லாரிகள் போட்டி போட்டு கொண்டு படுவேகமாக செல்வதால் உயிரை கையில் பிடித்து கொண்டு கிராம மக்கள் சென்று வருகின்றனர். மணல் லோடு லாரிகள் தொடர்ந்து சென்று வருவதால் சாலை குண்டு குழியுமாக மாறிவிட்டது. இதை எந்த அரசு அதிகாரியும் கண்டுகொள்ளவில்லையென பனவெளி கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுப்பணித்துறையின் லஸ்கர் எனப்படும் கரை பாதுகாவலர் அங்கு பணியில் உள்ளாரா என்பது நீண்டகால கேள்வியாக உள்ளது. இதேபோல் வருவாய்த்துறையினர், காவல்துறையினரும் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

இதேபோல் திருவையாறு அடுத்த ஆச்சனூர், சாத்தனூர் போன்ற இடங்களில் கொள்ளிடம் ஆற்றில் சட்டத்துக்கு புறம்பாக 3 குவாரிகள் செயல்பட்டு வருகிறது. ஒரு குவாரிக்கு தினமும் 200 லாரிகள் மூலம் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இச்சாலைகளிலும் மணல் லாரிகள் இரவில் வரிசை கட்டி செல்கிறது. அரசு அனுமதி பெற்ற குவாரிகளாக இந்த மணல் குவாரிகள் செயல்படுவதாக ஆச்சனூர், சாத்தனூர் கிராமவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகளின் ஆசியுடன் சட்டவிரோத குவாரிகள் செயல்படுவதால் கீழ்மட்ட அதிகாரிகள், அரசு பணியாளர்கள், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியவில்லையென புலம்புகின்றனர். ஒரு சில அதிகாரிகள் எங்களையும் பார்த்து கொள்ளுங்கள் என மணல் குவாரி நடத்துபவர்களிடம் கையூட்டு வாங்கி கொண்டு மணல் கொள்ளையை கண்டுகொள்வதில்லை. ஆச்சனூர், சாத்தனூர் மணல் குவாரிகளுக்கு கொள்ளிடம் கரையில் உள்ள மருவூர் காவல் நிலையத்தை தாண்டி தான் செல்ல வேண்டும். மேலும் இந்த சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு மிக அருகில் தான் இந்த காவல் நிலையமும் செயல்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் மணல் லாரிகளை வந்தால் அனைத்து காவலர்களும் கண்ணை மூடிகொள்வதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இயற்கை வளத்தை உயர் அதிகாரிகளின் துணையுடன் சுரண்டும் இவர்களுக்கு ஆளுங்கட்சியினர் மட்டுமின்றி பல கட்சியினரும் பின்புலத்தில் இருந்து ஊக்கம் கொடுத்து வருகின்றனர். இதற்கு மாதாமாதம் கட்சியினருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சட்டவிரோத மணல் குவாரிகள் தினமும் கனஜோராக செயல்பட்டு வருவதை ஒரு சில நேர்மையான அதிகாரிகள் கூட தடுக்க முடியவில்லையென வேதனைபடுகின்றனர்.

உயர் நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள், உத்தரவுகள் இருந்தும் அவற்றை காற்றில் பறக்கவிடும் அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மற்றும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தண்டிக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் இம்மணல் வளத்தை கொண்டு தான் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுவும் வற்றி குடிநீருக்கு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி புதுக்கோட்டை, ராமநாதபுரம் மக்களும் அல்லாட நேரிடும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக கலெக்டர், பொதுப்பணித்துறை செயலாளர், காவல்துறை இயக்குனர் இப்பிரச்னையில் தலையிட்டு சட்டவிரோத மணல் குவாரிகளை நிறுத்தி இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன், வாத்து பட டோக்கன்கள்

பணம் கட்டி மணல் ஏற்றிய பிறகு ஒவ்வொரு லாரி டிரைவரிடமும் குவாரி உரிமையாளர்கள் டோக்கன் வழங்குகின்றனர். வழியில் எந்த அரசு அதிகாரி, காவல்துறை அதிகாரி மறித்து சோதனையிட்டாலும் இந்த டோக்கனை காண்பித்தால் விட்டுவிட வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு உள்ளது. அந்த டோக்கனில் லாரி பதிவெண், தேதி, ஒரு மணிநேர கால அவகாசம் குறிப்பிடப்பட்டுள்ளது. மணலை ஏற்றி கொண்டு லாரி புறப்படும் நேரத்தையும் அதன்பிறகு ஒரு மணி நேரத்தில் மணலை இறக்கிவிட வேண்டும் எனவும் இதற்கு பொருள். மேலும் அந்த டோக்கன்களில் மீன், வாத்து, கோழி, எலி என ஒரு படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த படம் ஒவ்வொரு நாளும் வேறுபடும். டோக்கனின் வண்ணமும் மாறுப்படும். மேலும் அதில் ஒருவர் கையெழுத்து போட்டு வழங்குவார். மணலை வேறு எங்கோ ஏற்றி கொண்டு இந்த டோக்கனை பயன்படுத்த முடியாது. அப்படி ஏற்றி சென்றால் வழியில் அதிகாரிகள் பிடித்தால் குவாரி உரிமையாளர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். குவாரிகளில் ஏற்றும் மணலை யாரும் பிடிக்கக்கூடாது என்பதற்கு தான் இத்தனை கட்டுப்பாட்டுடன் டோக்கன் வழங்கப்படுகிறது. இவையெல்லாம் உயரதிகாரிகளின் ஆசியுடன் நடப்பதால் காவிரி டெல்டா விரைவில் பாலைவனமாகும்.

தினமும் 200 லாரிகளுக்கு...

தஞ்சை அருகே பள்ளியக்ரகாரம், ஆச்சனூர், சாத்தனூர் ஆகிய இடங்களில் 4 சட்ட விரோத குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 3 யூனிட் மணல் அதாவது ஒரு லோடு மணல் ரூ.12,600க்கு லாரி உரிமையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் ஒரு குவாரிக்கு குறைந்தபட்சம் 200 லாரிகளில் மணல் ஏற்றப்படுகிறது. அதன்படி பார்த்தால் ஒரு நாள் இரவில் 800 லோடு மணல் கொள்ளையாகிறது. இதன்மூலம் ரூ.1 கோடி மணல் கொள்ளை மூலம் சட்டவிரோத குவாரிகளை நடத்தும் உரிமையாளர்கள் ஈட்டுகின்றனர்.