https://s3.amazonaws.com/adaderanatamil/1575014448-Sri-Lanka-President-2.jpg

ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமருக்கு இடையில் கலந்துரையாடல்

தனது பதவிக் காலப்பகுதியில் இந்திய இலங்கை உறவை மிக உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று புதுடில்லியில் இன்று இடம்பெற்றது.

இதன்போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்துப் பேச ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார். அதேபோல், ஏனைய இந்தியப் பிரமுகர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக்குழுவினரை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்திய இராஜாங்க போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி வி.கே.சிங்க் வரவேற்றார்.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து உள்ளிட்ட பலர் அங்கு வந்திருந்தனர். வரவேற்பு நிகழ்வு பல கலாசார அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

இதேவேளை, இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜயசங்கரை சந்தித்தார்.

இதன் போது தமது உத்தியோகபூர்வ முதலாவது விஜயமாக இந்தியாவை தெரிவு செய்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கு இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். இலங்கையின் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்; தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு இரு நாடுகளுக்கிடையிலான நன்மைகளுடன் புதிய பிரவேசத்திற்கு இந்திய இலங்கை தொடர்புகளை முன்னெடுத்து புதிய யுகத்திற்கு இட்டு செல்லுவதே இந்திய பிரதமரின் எதிர்பார்ப்பாகும் என்று இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

தரமான உயர்தரத்திலான பொறிமுறையை முன்னெடுத்தால் வெளிநாட்டு முதலீடு இலகுவாக நாட்டுக்குள் இடம்பெறும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ இரு தரப்பு நட்புறவை மேம்படுத்துவதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவாலையும் நேற்று சந்தித்தார். ஜனாதிபதி இன்று பிற்பகல் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க இருப்பதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. பின்னர் இந்திய ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.