https://s3.amazonaws.com/adaderanatamil/1575013912-samarasinghe-2.jpg

அரச சேவையின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு

அரச சேவையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் சம்பளம் மற்றும் துறைசார் தர முரண்பாடுகளை நீக்குவதற்கும் ஆணைக்குழு அமைக்கப்படும் என அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கை திட்டத்தில் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச சேவையின் பிரச்சினைகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் கடந்த ஆட்சியில் பல்வேறு எதிர்ப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

அரச சேவையினை ஊழல் மோசடியற்ற வினைத்திறன் மிக்க சேவையாக மாற்றுவது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். தமது அமைச்சு கடமைகளை அவர் நேற்று ஆரம்பித்தார். இதன்போதே ராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் குறிப்பிட்டார்.

சகல சேவைகளுக்காகவும் விதிமுறைகள் அறிமுகப்படுத்தவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கூறினார். அரச சேவையாளர்களுக்கு சர்வதேச தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கு அரச சேவையாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி இந்த நிகழ்வில் கூறினார். அரச சேவையை வினைத்திறன் மிக்கதாக்கும் வேலைத்திட்டத்தை சாத்தியப்படுத்துவதுடன், அது தொடர்பில் வருடாந்தம் பரிசீலனை செய்யவுள்ளதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)