http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__343471705913544.jpg

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மாணவரின் தந்தை மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மாணவரின் தந்தை ரவிக்குமார் மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 5 மாணவர்கள் மீதும், அவர்கள் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் உதித் சூர்யா உள்ளிட்ட 5 மாணவ, மாணவியர்களுக்கு நீதிமன்ற ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை போன்று இந்த மாணவர்களின் பெற்றோர்கள் தாம், மாணவர்களின் இந்த நிலைக்கு காரணம் என்று நீதிமன்றங்கள் கருதியதின் காரணமாக பெற்றோர்களுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. உதித் சூர்யாவின் தந்தைக்கு மட்டுமே தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கில் கூடுதலாக சென்னையை சேர்ந்த ரிஷிகாந்த் என்ற மருத்துவ மாணவரும் இதேபோன்று நீட் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அவருடைய வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டது. எனவே கைதுக்கு பயந்து மாணவரின் தந்தை ரவிக்குமார் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து ரிஷிகாந்தின் தற்போதைய விரல் ரேகை மற்றும் தேர்வின் போது பதிவான ரேகையை நிபுணர்கள் ஒப்பீடு செய்தனர். இதில் மாறுபாடு உள்ளது. எனவே இவர்கள் முறைகேட்டில்  ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினை  அரசுத் தரப்பில் எழுப்பினர். இதையடுத்து நீதிபதி மருத்துவ மாணவரின் தந்தை ரவிக்குமார் நேரடியாக மதுரையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி தாம் குற்றமற்றவர் என்ற விளக்கத்தை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் தற்போது மதுரையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ரவிக்குமார் ஆஜராகியுள்ளார். தொடர்ந்து அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.