http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__539379298686982.jpg

குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

டெல்லி: மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருக்கும்  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஒருபுறம் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், இன்று அவர் குடியரசு தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்திய விஜயத்தை கண்டித்து சென்னையில் திராவிட விடுதலை கழகத்தின் சார்பில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று கோத்தபய ராஜபக்சே அதிபராக பதவியேற்றார். இவருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவு நேற்றைய தினம் இந்தியா வந்துள்ளார்.

3 நாள் பயணமாக டெல்லி வந்துள்ள அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிறப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரை வரவேற்று தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், வி.ஐ.பிக்களுக்கு அறிமுகபடுத்தி வருகிறார்.  இவருடைய வருகையை எதிர்த்து தமிழக தரப்பில் இருந்து தமிழக வாழ்வுரிமைக்காக போராடிவரும் பல்வேறு கட்சியினர் தங்களுடைய கண்டனங்களையும், போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்றைய தினம் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு திராவிட விடுதலை கழகத்தின் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திராவிட விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அமைப்பினை சேர்ந்தோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய திராவிடர் விடுதலைக் கழகத்தினர் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.