http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__74566066265107.jpg

ராதாபுரம் சட்டப்பேரவை தேர்தலின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட மேலும் தடை நீட்டிப்பு!

புதுடெல்லி: ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட டிச.11 தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராதாபுரம் தேர்தல் தொடர்பான வழக்கில் இறுதி விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க.வின் சார்பில் எம்.அப்பாவும், அ.தி.மு.க சார்பில் ஐ.எஸ்.இன்பதுரையும் போட்டியிட்டனர். இதில், இன்பதுரை 69,590 வாக்குகளையும் எம்.அப்பாவு 69,541 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடைசி மூன்று சுற்றுவாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை தாக்கல் செய்ய தெரிவித்ததோடு வற்றின் மறுவாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்தது. இதனிடையே, மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி அதிமுகவின் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘‘மறுவாக்கு எண்ணிக்கை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவை மட்டும் வெளியிட தடை விதிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தின் ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை நவ.29ம் தேதி வரை வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மேலும், அப்பாவு, இன்பதுரை தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு முன்னதாக ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது, வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பாவு, இன்பதுரை தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை டிசம்பர் 11ம் தேதி நடத்துவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை டிசம்பர் 11ம் தேதி வரை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.