http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__165416896343232.jpg

மதுரையில் புதைந்து வரும் 300 ஆண்டு பழமையான சாவடி நவீன தொழில்நுட்பத்தில் ‘உயர்கிறது’

* ஆறு அடி வரை ஜாக்கிகள் மூலம் அதிகரிப்பு
* பொதுமக்கள் நிதியில் ‘பழமை’ பாதுகாப்பு

மதுரை : மதுரையில் 300 ஆண்டு பழமையான சாவடி கட்டிடத்தை பாதுகாக்கும் வகையில், பொதுமக்களே நிதி திரட்டி, கட்டிடத்தின் உயரத்தை ஜாக்கிகளைக் கொண்டு நவீன முறையில் 6 அடிக்கு உயர்த்தும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். பழம்பெருமைக்குரிய நகரமாக மதுரை இருக்கிறது. இங்கு பழங்காலக் கட்டிடங்கள், தொன்மை அடையாளங்கள் நாளுக்கு நாள் அழிந்து வரும் நிலையில், மதுரை, பழங்காநத்தம் தெற்குத்தெரு பகுதியில் புதைந்து வந்த ஒரு சாவடியை, அப்பகுதி பொதுமக்களே முன்வந்து, புனரமைத்து, ஜாக்கிகள் கொண்டு 6 அடி உயரத்திற்கு உயர்த்தும் பணியை மேற்கொண்டிருக்கின்றனர்.

மதுரையில் பொதுமக்கள், முதியவர்கள் ஓய்வெடுக்கவும், பல்வேறு புராண விஷயங்களை பேசி மகிழவும் கைகொடுத்து வருபவை, ஊரின், தெருவின் முக்கிய இடங்களில் அமைந்துள்ள சாவடிகளேயாகும். ராமாயணச்சாவடி உள்ளிட்ட நகருக்குள் பல்வேறு இடங்களிலும் பழமையான இந்த பொதுச்சாவடிகள் இருக்கின்றன. இவ்வகையில் மதுரை பழங்காநத்தம் தெற்குத்தெருவில், பழமையின் அடையாள பெருமைக்குரியதாக இருக்கும் சாவடி கட்டிடம், சமீப காலமாக சாலையின் உயரத்தை விட பள்ளத்திற்குள் போய் விட்டது. இதனால் மழைகாலத்தில் கட்டிடத்திற்குள் தண்ணீர் புகுந்து, கட்டிடம் சேதமடைந்து, உடைத்து விழும் நிலை ஏற்பட்டது.

இதனைக் கண்டு வருந்திய இப்பகுதி பொதுமக்கள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். இவ்வகையி்ல் ரூ.25 லட்சம் நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு, சாவடி கட்டிடத்தின் பழமை மாறாமல் அப்படியே உயர்த்த முடிவானது. இதன்படி பீகார் மாநிலத்திலிருந்து கட்டுமான குழு மதுரை வந்தது. 15 தொழிலாளர்கள் கடந்த 60 நாட்களாக, இந்த சாவடி கட்டிடத்தை, ஜாக்கிகள் கொண்டு 6 அடிக்கு உயர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுரை பழங்காநத்தம் தெற்குத்தெரு பொதுமக்கள் கூறும்போது, ‘‘மதுரையின் பழமை நாளுக்கு நாள் அழிந்து வருகிறது.

பழைய கட்டிடங்களும் பொக்கிஷம்தான். அவ்வகையில் 300ஆண்டுகளைக் கடந்த இந்த கட்டிடம் நல்ல நிலையில் இருக்கிறது. தரைத்தளத்திலிருந்து 6 அடிக்கு உயரத்தை அதிகரித்து, லேசான சீரமைப்பு மூலம் இந்த பழமையான சாவடிக் கட்டிடத்தை காப்பாற்றலாம். எங்களின் தலைமுறையினர் இந்த சாவடி கட்டிடத்தில்தான் தங்கி, பல கதைகள் பேசி இருக்கிறார்கள். இந்த கட்டிடத்தை காத்து, அவர்களது ஞாபகங்களை பாதுகாத்திருக்கிறோம். இன்னும் இரு வாரங்களுக்குள் தொழிலாளர்கள் முழுமையாக கட்டிடத்தை உயர்த்தி, பணியை முடித்துத் தருவதாக தெரிவித்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட இந்த பழமைப் பொக்கிஷத்திற்காக மிகப்பெரிய விழா நடத்துவோம்’’ என்றனர். மதுரை பழங்காநத்தத்தில் நடந்து வரும் இக் கட்டிடப் பணிகளை, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் வந்து பார்த்துச் செல்கின்றனர்.