http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__54317653179169.jpg

பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.: இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பேச்சு

டெல்லி : உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கையை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பயணத்தின் முக்கிய அம்சமாக டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் அவர்களை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கோத்தபய ராஜபக்சே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு


பேச்சுவார்த்தையில் இந்திய நிதியுதவியில் தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டம், திரிகோணமலையில் எண்ணெய் கிடங்கு, தமிழர் பகுதியை இணைக்கும் ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன. உள்நாட்டு போரில் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் சொந்த ஊரில் குடியமர்த்தும் திட்டத்தை தொடர வேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார். விடுதலை புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் போர் குற்றம் நடந்தது தொடர்பான விசாரணை, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை போன்ற அம்சங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோத்தபய ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இதன் தொடர்ச்சியாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை வரவேற்கும் வகையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் முப்படையும் அணிவகுத்தனர். குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். இதனிடையே டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் பேசியதாவது,'இருநாட்டு உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். சிறப்பான வரவேற்பு அளித்த இந்திய அரசுக்கும் ,என்னை அழைத்த பிரதமர் மோடிக்கும் நன்றி. பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.'என்றார். இதைத் தொடர்ந்து ராஜ்காத்தில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில்  கோத்தபய ராஜபக்சே மரியாதை செலுத்தினார்.