நாங்கள் அனுபவித்த மன அழுத்தங்களை இவர்கள் அனுபவிக்கவில்லை: நடிகர் ஆரவ்
by எழில்பிக் பாஸ் புகழ் ஆரவ், ராதிகா நடிப்பில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்கிற சரண் இயக்கியுள்ள படம் இன்று வெளியாகியுள்ளது. வட சென்னை டான் ஆக ராதிகா இந்தப் படத்தில் நடித்துள்ளார். காவ்யா தபார், நிகேஷா படேல், யோகி பாபு, ரோஹிணி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சைமன் கிங்.
இந்நிலையில், சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு ஆரவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சினிமா பின்புலம் இல்லாமல் இருப்பதால் என்னால் கதாநாயகன் ஆகமுடியுமா என்பது சந்தேகமாக இருந்தது. பலர் முயற்சி செய்து தோல்வியடைந்துள்ளார்கள். மற்ற நடிகர்களின் பேனர்களைப் பார்த்து நானும் அந்த இடத்துக்கு வரவேண்டும் என எண்ணுவேன். கனவு நிஜம் ஆகும்போது சந்தோஷமாக உள்ளது. ஒரு நல்ல நடிகராகப் பல கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும்.
இந்த வருட பிக் பாஸைக் கொஞ்சமாகப் பார்த்தேன். உண்மையில் சொல்லவேண்டும் என்றால், நாங்கள் முதல் சீஸனில் அனுபவித்ததை விடவும் மன அழுத்தங்களை இந்தமுறை குறைவாகவே அனுபவித்துள்ளார்கள். நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களிடம் இதுகுறித்துப் பேசியபோது, போட்டியாளர்களிடம் கடினமாக நடந்துகொள்வதற்குப் பயமாக உள்ளது, ஏனெனில் அவர்கள் தாங்குவார்களா எனத் தெரியவில்லை என்றார்கள். ஆனால், எங்களை வைச்சு செஞ்சாங்க. நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். 100 நாள்களைக் கடப்பதும் அதற்குப் பிறகு சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவதும் சுலபமாக இல்லை. அங்கிருந்து வெளியே வரும்போது 10, 15 கிலோ எடையை இழந்திருந்தோம். இப்போது நிகழ்ச்சியின் தன்மை மாறிவிட்டது. இருந்தாலும் பிக் பாஸ் ஒரு நல்ல நிகழ்ச்சி என்றார்.