இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்த விரும்புகிறேன்: கோத்தபய ராஜபட்ச
by DINஇலங்கையின் புதிய அதிபா் கோத்தபய ராஜபட்ச மூன்றுநாள் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை இரவு வந்தடைந்தார். இதையடுத்து தலைநகர் தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கோத்தபய ராஜபட்சக்கு அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை வரவேற்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு நடைபெற்றது.
இதையடுத்து ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோத்தபய ராஜபட்ச கூறியதாவது,
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். எனக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளன. இருநாடுகளுக்கும் இடையே நீண்டகால நட்புறவு இருந்து வருகிறது. எனவே, இலங்கை அதிபராக எனது பதவிக்காலத்தில் இந்தியா, இலங்கை இடையிலான நல்லுறவை மேம்படுத்த விரும்புகிறேன். இந்தியாவுடன் இணைந்து பொருளாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமா் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறாா். அப்போது, இலங்கை தமிழா்களின் நலன், இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்புச்சூழல், இரு தரப்பு வா்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என்று தெரிகிறது.
அதிபரான பிறகு கோத்தபய ராஜபட்ச மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.