http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__973537623882294.jpg

இந்திய விமான படைக்கு குறைந்த செலவில் க்ரீபன் விமானங்களை விற்கத் தயார்: ஸ்வீடன்

ஸ்டாக்ஹோம்: இந்திய விமான படைக்கு 114 க்ரீபன் ரக போர் விமானங்களை குறைந்த விலையில் தயாரித்து வழங்க தயாராக இருப்பதாகவும், க்ரீபன் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்க விருப்பம் உள்ளதாகவும் ஸ்வீடன் தெரிவித்துள்ளது. வார இறுதியில் ஸ்வீடன் மன்னர் கார்ல் கஸ்டாஃப் இந்தியாவிற்கு வரும் போது இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அந்நாட்டு தூதர் க்ளாஸ் மோலின் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை ஸ்வீடன் மன்னர், ராணி சந்தித்த பின்னர், மும்பை மற்றும் உத்தரகாண்டிற்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தங்கள் நாட்டின் சாப் நிறுவனம் இந்தியாவின் டெக் மகேந்திரா நிறுவனத்துடன் நீண்டகாலமாக இணைந்து தொழில் செய்வதையும் ஸ்வீடன் தூதர் சுட்டிக்காட்டினார். டசால்ட், யூரோ ஃபைட்டர், போயிங், லாக்ஹீட் மார்ட்டின், ரஷ்ய விமான நிறுவனம், சாப் ஆகிய நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தத்தை பெறுவதில் முனைப்பு காட்டி வரும் நிலையில், ஒற்றை இன்ஜின் கொண்ட எடை குறைந்த விமானங்களை வழங்கவும், ஒப்பந்தம் கிடைக்கும் பட்சத்தில் தொழில்நுட்பத்தை இந்திய நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் ஷாப் தெரிவித்துள்ளது.