வெடுக்குநாரி ஆலய ஏணிப்படி விவகாரம் தொடர்பில் ஆலய நிர்வாகத்திற்கு பிணை
by Theesan, Rebeccaவவுனியா - நெடுங்கேணி, வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏணிப்படி அமைத்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆலய நிர்வாகத்தினர் சொந்தப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஆலயத்தின் தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் சமூகமளித்திருந்தனர். இவர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டதரணி மு.சிற்றம்பலத்தை தலைமையாக கொண்ட ஐந்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
இதேவேளை நீதிமன்றில் ஆஜராகியிருந்த பொலிஸார் ஏணி படிகள் பொருத்தப்பட்ட விடயத்தில் ஆலய நிர்வாகத்தினரை கைதுசெய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
எனினும், குறித்த ஆலயம் தொல்பொருட் திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாமையினால் கைது செய்ய முடியாது என நீதிபதி தெரிவித்ததுடன், ஒருவருக்கு தலா 50ஆயிரம் படி ஒரு இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான சொந்தப்பிணையில் மூவரையும் விடுவித்திருந்தார்.
அந்தவகையில், குறித்த வழக்கு எதிர்வரும் வருடம் ஜந்தாம் மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயப் பகுதியானது தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்களின் தொடர் போராட்டங்களால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கபட்டதுடன் ஆலய வளாகத்தில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களம் மற்றும் நெடுங்கேணி பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெடுக்குநாரி மலையில் பக்தர்கள் ஏறுவதற்கு வசதியாக இரும்பினால் அமைக்கப்பட்ட ஏணிப்படி ஒன்று அப்பகுதி மக்களால் அண்மையில் பொருத்தப்பட்டது.
குறித்த ஏணிப்படி பொருத்தியமைக்கு எதிராக ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்திற்கு எதிராக தொல்பொருள் திணைக்களம் நெடுங்கேணி பொலிஸாருடாக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.