http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__991329371929169.jpg

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் மின்சார ஆட்டோ திட்டம்: முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை: எம்-ஆட்டோ என்ற மின்சார பேட்டரி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோ திட்டத்தை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவை தொடங்கி வைத்துள்ளார். மாசில்லா தமிழகம் என்ற திட்டத்தின்படி இந்தியாவிலேயே முதன்முறையாக மின்சார ஆட்டோ தமிழகத்தில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 5 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கினார். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதேபோல கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 26ம் தேதி கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக தொடங்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு வழங்கியதுபோன்று இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். மேலும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் சுமார் 2 கோடியே 5 லட்சம் குடும்பத்தினர் பயன் அடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடியே 5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா கடந்த 27ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் வரும் 29ம் தேதி இதற்கான பணிகளை தொடங்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதன் பின் எம்-ஆட்டோ திட்டத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை மின்சார ஆட்டோவை இயக்க முடியும். டிசி சார்ஜிங் மூலமாக 30 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகக்கூடிய வசதி மின்சார ஆட்டோவில் உள்ளது.