மலையக மக்களை ஏன் எல்லோரும் வதைக்கிறீர்கள்! அவர்கள் யாரென தெரியுமா உங்களுக்கு....

by

இலங்கை திரு நாட்டின் பூர்வக்குடிகள் என்று சொல்லிக்கொள்ள மலையக மக்களாகிய நம்மால் முடியாவிட்டாலும், இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு நாங்கள் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ளலாம்.

என்றும், இந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரியபங்கினை மலையக மக்கள் வகித்து கொண்டிருக்கின்றார்கள். இது நிச்சயமாகப் பெருமைப் பட வேண்டிய ஒன்றுதான். இந்த பெருமைகள் அனைத்தும் கொட்டும் மழையிலும், அட்டைக் கடியிலும் கொழுந்து பறிக்கும் எம்மை ஈன்றெடுத்த தெய்வங்களைச் சாரும். என்ன ஒன்று, யாரும் எம்மைப் பெருமைப்படுத்த விரும்பவில்லை என்பதுதான் வேதனை.

இன்று பல அரசியல் மேடைகளில் மலையக மக்களாகிய நாங்கள் பேசுபொருளாக இருக்கின்றோம். நம்மை வைத்து நன்றாக அரசியல் செய்கின்றார்கள் நம் தலைவர்கள். ஒரு சிறு திருத்தம் நம்மவர்கள் மட்டுமல்ல சம காலத்தில் பல தலைவர்கள் மலையக மக்களை வைத்து தனது அரசியல் பிழைப்பை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு தலைவனுக்குரிய சிறந்த பண்பு என்னவெனில் தான் சார்ந்த சமூகத்தை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமை, தரக்குறைவாக விளிக்காமை, பிறரிடத்தில் தாழ்த்தாமை. தற்போது நம்முள் ஒரு கேள்வி எழலாம், இந்த பண்புகள் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில தலைவர்களிடம் இருக்கின்றதா என்று.

நிச்சயமாக இதற்கு பதில் நூற்றுக்கு 90 சதவீதம் இல்லை என்பதுதான். என்றாவது மலையக தலைவர்கள் எமது மக்கள் சார் பிரச்சினைகளை துணிவோடு பேச முற்பட்டிருக்கின்றனரா..? அழுத்தங்கள் பிறப்பிக்கப்படும் வரை.

பகிரங்கமாகவே கூறலாம், மலையக அரசியலின் பெரும் புள்ளிகள், தவிர்க்கமுடியாத சக்திகள் என்றால் தற்போது இரண்டை மாத்திரமே கூற முடியும். ஒன்று புதிதாக அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சார்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் ஒரு தரப்பு. முன்னாள் அமைச்சர் திகாம்பரம் சார்பான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஒரு தரப்பு. இது தவிர இன்னும் சில இதர அரசியல் தரப்புக்கள் இருக்கின்றன.

இதுவரை காலமும் இந்த அரசியல் தரப்புக்கள் மலையத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? உருப்படியாக எத்தனை செயல்திட்டங்களை செய்து முடித்துள்ளார்கள். காலகாலமாய் தனி வீட்டுத் திட்டம், தனி வீட்டுத் திட்டம் என பேசியே தமது அரசியலை சிறப்பாக கொண்டு செல்கின்றனர். எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எத்தனை லயன் அறைகள் தனி வீடுகளாக மாறியுள்ளன. எத்தனைக் காலத்திற்கு இந்த தனி வீட்டுத்திட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு சுற்றபோகின்றார்கள்.

வீதிகளை செப்பனிட்டோம் என்பார்கள். எத்தனை வீதிகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளன. எத்தனை வீதிகள் அமைத்து பல ஆண்டுகளாக, அதிகம் வேண்டாம் ஒரு இரண்டு ஆண்டுகள் சரி சேதமடையாமல் இருக்கின்றன..? பதில் கூற முடியுமா? அனைத்தும் எமது அரசியல் தலைவர்களின் செயல்திறன். பாராட்டுக்குரிய ஒன்றுதான். விருதுகளே கொடுக்கலாம் அதீத அபிவிருத்திக்காக.

எமது தலைவர்களின் அடுத்த ஆயுதம், மக்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற்றுக் கொடுப்போம் என்பது. எத்தனை ஆண்டுகளாக கூறிவிட்டார்கள். இதை வைத்து எத்தனைப் பேர் நாடாளுமன்றம் சென்று அமைச்சுப் பொறுப்பை ஏற்று அரசியல் புரட்சியே செய்து விட்டார்கள் தெரியுமா? ஆனால் என்ன ஊதியம் தான் கிடைக்கவில்லை இன்னும். ஆனால் தலைவர்களின் வார்த்தைகள் மட்டும் நாளையே ஆயிரம் ரூபாவை கையில் கொண்டு வந்து கொடுப்பதை போலத்தான் இருக்கும். சும்மாவா சொன்னார்கள் அரசியல்வாதிக்கு பேச்சுத்திறன் முக்கியம் என்று.

இதையெல்லாம் விட்டுவிடுவோம், தற்போது மலையக மக்களுக்கான மரியாதை என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. தேர்தல் காலங்களில் வீடு வீடாய் வந்து எமது தாய்மார்கள் செய்து வைத்த ரொட்டியை சாப்பிட்டு(சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எமது தேசிய உணவு ரொட்டி தானே.. இதில் மறைப்பதற்கென்ன), அழகான நாடகங்களை அரங்கேற்றி வாக்குக் கேட்க தெரிந்த அரசியல் தலைவர்களுக்கு தொலைக்காட்சிகள், பொதுவெளிகள் என்று வந்தால் மலையக மக்கள் படிக்காத முட்டாள்களாகின்றோம், பாவப்பட்ட ஜென்மங்கள் ஆகின்றோமா?

ஒருவர் நண்டு என விளிக்கிறார். ஐம்பது வைத்தியர், ஐம்பது பொறியியலாளர் என கிண்டலடிக்கின்றார். நிச்சயமாக நீங்களலெல்லாம் சந்தா என்ற பெயரில் எம்மை சுரண்டித் உண்ணாமலிருந்தால் ஐம்பது என்ன ஆயிரம் வைத்தியர்கள், ஆயிரம் பொறியியலாளர்கள் எம்மில் உருவாகுவார்கள். அதற்குத்தான் நீங்கள் வழிவகுத்தீர்களா அல்லது வழிதான் விட்டீர்களா என்ன?

வறுமை, “உயர்தரத்திற்கு மேல் படிக்கவேண்டும் என்றால் எனது தலையைத்தான் அடைமானம் வைக்கவேண்டும்” என எம் தாயார் கூறும் போது, கேட்கும் எமக்கு தொண்டைக்குழி அடைக்கும். இது எமது சாபக்கேடு என நொந்துக் கொண்டு பையைத் தூக்கிக்கொண்டு தலைநகரத்திற்கு வேலைத் தேடி புறப்படச் சொல்லும். அப்போது எம் தந்தை தனது கையறு நிலையை எண்ணி கூணிக் குறுகிய வேதனையை நீங்கள் என்றாவது உணர்ந்ததுண்டா.

ஆனால், நீங்கள் நினைப்பதைப் போல மலையகம் அல்ல... ஐம்பது இல்லாமலிருக்கலாம் அதில் ஒரு சிறு துளியேனும் மலையகத்தவர் முன்னேறிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

மற்றுமொருவர் மலையகத்தவரை, “ அவனுக்குத் தெரியும்” என ஒருமையில் விளிக்கின்றார். நீங்கள் மலையக மக்களின் பிரதிநிதியாக இருக்கலாம். அதற்காக மலையக மக்கள் எல்லாம் உங்களது அடிமை என நினைத்தீர்களா? வெளிநாட்டில் சென்று படித்து பட்டம் பெற்றேன் என்பது முக்கியமல்ல. பேசும் வார்த்தையில் கண்ணியம் வேண்டும். ஒருவரின் பண்பை, அவர் பேசும் வார்த்தைகளே தீர்மானிக்கின்றன.

படித்த படிப்பிற்கு பிரயோஜனம் இல்லாமல் தந்தைக்கு பின் நான் என தலைமைக்காக காவல் காக்கும், இந்தியாவைப் போல குடும்ப அரசியலை நடத்த முற்படும் நீங்களெல்லாம் உழைத்து உண்ணும் எங்களைப் பற்றி பேசுவதற்கு துளியும் தகுதியற்றவர்கள். பத்து, பதினைந்து கிலோ மீற்றர்கள் நடந்து சென்று படித்து பட்டம் பெற்றவர்களும் எம் மலையகத்தில் இருக்கின்றனர். அவர்களின் கால்களின் தூசுக்கு நிச்சயமாக நீங்கள் ஈடாக மாட்டீர்கள் என்பதை மறவாதீர்கள்.

இதனைத் தவிர, இந்த நாட்டில் வாழும் எமது சக இனங்களை நாங்கள் எப்போதுமே மதிப்பதுண்டு. எமது பகுதிகளில் உள்ள தமிழ், முஸ்லிம், சிங்களவர்களுடன் நாங்கள் என்றுமே ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் பிரிவினை என்பதை அண்மையில் ஊடகங்களின் வாயிலாக விதைத்தார் ஒரு முன்னாள் அமைச்சர்.

எம்மைத் தரைகுறைவாக பேசுவதாக எண்ணி, தோட்டக் காட்டான் என்றார். அந்த வார்த்தையை நாங்கள் இழிவாக எண்ணவில்லை. காடுகளாக இருந்தவைகளை செல்வம் கொழிக்கும் தோட்டங்களாக மாற்றியமைத்த உழைப்பாளிகள் நாங்கள். மன்னிக்கவும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களே, உங்களது எண்ணம் பொய்த்துப் போனது. எங்களது உழைப்பை நீங்கள் கொச்சைப் படுத்தலாம். ஆனால் உழைக்க முடியாது. உங்களை விட நாங்கள் என்றுமே மேல்தான்.

அந்த சமயத்தில், கோவம் கொண்டெழுந்த முன்னாள் அமைச்சர் மனோ கணேசனிற்கு நாம் ஆதரவாய் நிற்போம் என ஒரு கூட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பானவர்கள் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். முதலில் உங்களைத் திருத்துங்கள். நீங்கள் தவறாக மலையக மக்களைப் பற்றி கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள், மலையக மக்கள் பற்றிய உங்களது எண்ணங்கள் கூட தவறானதே. நீங்கள் அதிலிருந்து முதலில் வெளியில் வாருங்கள். அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் கூற்றுக்கு எதிராகவும், முன்னாள் அமைச்சர் மனோ கணேசனுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கலாம்.

அடுத்தது, எமது மலையக இளைஞர்கள். ஏன் நாங்கள் இன்னும் நுனிப்புல் மேயும் பசுக்களாக இருக்கின்றோம். மலையகம் தொடர்பில் ஒவ்வொரு சர்ச்சைகளும் எழும்போது முகநூலில் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு குரல் கொடுத்து சண்டை பிடித்து சமூக வலைத்தள போராளியாக மாத்திரம் இருந்து விடுகிறீர்களே.. நிச்சயமாக இந்த நிலையை எண்ணி வேதனைத் தான் கூடுகின்றது.

எமது தாய் தந்தையரின் வேதனத்தைப் பெற்றுக் கொள்ள அன்று காலி முகத்திடலில் ஒன்று திரண்ட கூட்டத்தை நினைத்து பிரம்மிப்பாக இருந்தது. ஆனால் அவை அனைத்தும் முகநூல் போராளிகள் என அறிகையில் மனம் வெதும்புகிறது. மலையக இளைஞர்களின் உணர்திறன் குறைந்து விட்டதா என எண்ணத் தோன்றுகின்றது.

முகநூலில் உங்களது சிந்தனைகளை, உங்களது கோபத்தினைப் பார்க்கும் போது நன்றாகத்தான் இருக்கின்றது. அதை, அந்த மாற்றத்திற்கு செயல் வடிவம் கொடுத்தால் எமது அடுத்த தலைமைமுறையின் எதிர்காலமே மாறும். நான் வன்முறையை கூறவில்லை. மனதளவிலான மாற்றத்தையே கேட்டு நிற்கின்றேன்.

இன்னும் சில இளைஞர்கள், பாட்டன், தந்தை காலத்திலிருந்து நாங்கள் இவர்கள் பக்கம் தான் என பழைய பஞ்சாங்கத்தைப் பாடிக்கொண்டு, அறியாமை எனும் போர்வையை போர்த்திக் கொண்டு திரிகிறார்கள். முதலில் உங்கள் தலைவன் மீதான பக்தியை அறுத்தெறியுங்கள். அந்த வட்டத்திலிருந்து வெளியில் வாருங்கள். எமது முந்தைய தலைமுறையினரை, அடுத்ததாக எம்மை, அடிமையாக வைத்திருந்த ஒரு கூட்டத்திடம் எதிர்கால உங்கள் சந்ததியை நீங்களே வழிய சென்று அடிமைகளாக அடகு வைக்கின்றீர்கள் என்பதை மறவாதீர்கள்.

இன்று மலையக மக்களாகிய நாங்கள் எத்தனைத் தூரம் உயர்வடைந்துள்ளோம் என்பதை எண்ணிப்பாருங்கள், ஏன் மலையகத் தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராகக் கூட இருக்கின்றார். இத்தனைத் தூரம் நாம் வளர்ச்சிக் கண்டுள்ளோம்.

இவற்றை சற்றே சிந்தியுங்கள், படித்த கல்விமான்கள் பலர் எம்மத்தியில் இருக்கின்றனர். மாற்றத்தை ஏற்படுத்த அவர்களால் முடியும். ஆனால் அவர்களிலும் சிலர் இவ்வாறு அரசியல்வாதிகளின் பின்னால் கூலிக்கு மாறடிப்பதுதான் வருந்ததக்கது.

இன்று வடக்கு, கிழக்கினை எடுத்துப் பாருங்கள். எது என்னவானாலும் அவர்கள் சார் சமூகத்தை அவர்களே என்றாவது விட்டுக்கொடுக்கின்றார்களா? தமது சமூக பிரச்சினைகளை பேச பின்னிற்கின்றனரா? ஆனால் நாம் ஏன் இன்னும், ஒருவரின் பின்னால் ஒருவர் என்ற கோட்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றோம். நாம் யார் என்பதை நாம் எப்போது உணரப் போகின்றோம்.

படித்த கல்விமான்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள், நீங்கள் மலையகத்தில் புரட்சி செய்ய வேண்டாம், மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம், உங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் படித்த இளைஞர்களே நீங்கள் உங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். முதல் விதை உங்கள் மனதில் துளிர்க்கட்டுமே.

அதைவிடுத்து வெறுமனே உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களாலும், கருத்து மோதல்களாலும் மாற்றத்தினை ஏற்படுத்த முடியாது. அறிவுபூர்வமாக சிந்திப்போம். நாளைய மலையகம் எமக்கு பொற்காலமாக அமையட்டும்.

உங்களது தந்தை ஒரு தரப்பினருக்கு ஆதரவு என்றால் இருக்கட்டும்.. அவர்களை மாற்ற முடியாவிட்டால் நீங்கள் மாறுங்கள். மாற்றம் உங்களில் இருந்து தொடங்கட்டும். சிந்தனையால் ஒன்றிணைந்து அடுத்த தலைமுறையையாவது தனி வீடு, உழைப்புக்கேற்ற ஊதியம், வறுமை என்பவற்றிலிருந்து விடுவித்து சுதந்திரமாய் வாழ விடுவோம். மாற்றம் மலையக இளைஞர்கள் கையிலேயே......